jump to navigation

ஸ்ரீரங்கம்=interesting facts told by sujatha (Famous Scientist, Writer) February 16, 2014

Posted by Dr.NVS in Brahminsnet Postings.
trackback

ஸ்ரீரங்கம்=interesting facts told by sujatha

ஸ்ரீரங்கம் மிகப் பழைய கோவில் சார்ந்த நகரம். வைணவத் தலங்களில் மிக முக்கியமானது. சிலப்பதிகாரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ’அரங்கம்‘ எனும் வேர்ச்சொல் தீவு, தனிப்படுத்தப்பட்ட இடம் என்ற பொருள் கொண்டது. காவிரியும் கொள்ளிடமும் பிரிந்து சேரும் தீவுப் பகுதியில் மிகப் பழைய கோவிலைச் சார்ந்த ஒரு நகரம்.

ஆழ்வார்கள் அனைவரும் பாடிய தலம் ஸ்ரீரங்கம். நான் இந்த பூலோக வைகுண்டத்தில் பிறக்கவில்லையெனினும் என் இளமைக் காலத்தில் ஏழு வயதிலிருந்து கல்லூரியில் பட்டப்படிப்பு வரை பன்னிரண்டு ஆண்டுகள் பாட்டி வீட்டில் அங்கு வாழ்ந்தேன். பின் என் தந்தை ஒய்வு பெற்றதும் ஸ்ரீரங்கத்தில் சில வருஷங்கள் வாழ்ந்தார். என் தாத்தா சிங்கமையங்கார் ஸ்ரீரங்கத்தில் பெரிய வீடு, வேதபாடசாலை எல்லாம் வைத்திருந்தார்.

ஸ்ரீரங்கம் உயர்நிலைப் பள்ளி, திருச்சி ஜோசப் கல்லூரி, கொள்ளிடக்கரை அம்மா மண்டபம் எல்லாம் என் இள வயது ஞாபகங்கள். ஸ்ரீரங்கம் என்பது ஒரு metaphor-தான். இதைப் படிப்பவர் ஒவ்வொருவருக்கும் அவரவர் ‘ஸ்ரீரங்கம்‘ உண்டு.

(இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள ஸ்ரீரங்கம் கோட்டோவியங்கள் சுஜாதா தேசிகன் அவர்கள் வரைந்தது)

சுஜாதா தன் பெற்றோருடன் வளர்ந்தது சில வருடங்கள்தாம். தந்தைக்கு அடிக்கடி இடமாற்றம் நடக்கும் என்பதால் சுஜாதாவை ஸ்ரீரங்கத்திலுள்ள பாட்டி வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்டார்கள். ஏழு வயதிலிருந்து கல்லூரி முடிக்கும்வரை சுஜாதாவின் வாழ்க்கை ஸ்ரீரங்கத்தில்தான். முதலில் அம்மாவைப் பெற்ற பாட்டி வீட்டிலும், பிறகு அப்பாவைப் பெற்ற பாட்டி வீட்டிலும் வளர்ந்திருக்கிறார். இந்த அப்பாவைப் பெற்ற பாட்டி தான் சுஜாதாவின் பிரசித்தி பெற்ற பாட்டி, கோதை அம்மாள் என்கிற ருக்மிணி அம்மாள். தனது பிரசித்தி பெற்ற ‘ஸ்ரீரங்கத்துக் கதைகள்‘ தொகுப்பை இந்தப் பாட்டிக்குத் தான் அர்ப்பணம் செய்திருப்பார்.

ஸ்ரீரங்கத்துக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் புறப்பட்டு விடுவேன். ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் அதிகாலை கொண்டு சேர்த்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் நகர நாகரீகத்தின் தாக்கத்தால் கோவில் சார்ந்த இந்த நகரம் கொச்சைப்படுத்தப்படுவதைக் கவனிக்கிறேன். இதுபற்றி வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை. ஆதங்கம்தான்.ஸ்ரீரங்கம் போன்ற கோயில் சார்ந்த தலங்கள் வருஷாவருஷம் மாறத்தான் வேண்டியிருக்கிறது. அதன் குறுகலான தெருக்களில் ராட்சச பஸ்கள் நுழைந்து உறுமுகின்றன. சாப்பாட்டுக் கடைகள் பெருகியுள்ளன. விதம்விதமான புகைப்படங்கள், வெண்கல விளக்குகள், மரப்பாச்சி பொம்மைகள் போன்ற பல பொருள்கள் அங்காடிகளில் அதிகமாகியுள்ளன.

ஆதாரமாக ஸ்ரீரங்கத்தின் பொருளாதாரம் இன்றைய தினங்களில் மற்றொரு அடையாளத்தின் மூலம் கிடைக்கிறது. இதை இங்கு ஒரு வங்கியில் பணிபுரியும் நண்பர் சொன்னார். ஸ்ரீரங்கம் என்பது ஒரு விதமான சரணாலயம் போல உள்ளது. அமெரிக்காவில் சாஃப்ட்வேர் பணிபுரியும் இளைஞர்கள் இங்கே ஒரு ஃப்ளாட் வாங்கி, தத்தம் பெற்றோரைப் பொருத்தி வைத்துச் சென்றிருக்கிறார்கள். மாசம் இருநூறு, முந்நூறு மிஞ்சிப் போனால், ஐநூறு டாலர் அனுப்பி வைத்தால் எதேஷ்டம். அவர்களுக்கு அங்கே இது ப்ளாக்பஸ்டர், கோக் பிட்சா காசு இது. இவ்வகையில்ஸ்ரீரங்கத்துக்கு டாலர் வருமானம் அதிகம் என்று நண்பர் சொன்னார்.

உத்திரை, சித்திரை வீதிகளை விட்டு வெளிச் சுற்றுகளில் நிறைய ஃபிளாட்கள் வந்திருக்கின்றன. புறாக்கூடுகள். துறையூர் வழியாகச் செல்லும்போது பிடிவாதமாக மண்ணச்சநல்லூர் வரை இடைவெளி கோபுரங்கள் அனைத்தையும் வண்ணவண்ண கோமாளி கலர் பெயிண்ட் அடித்துவிட்டார்கள்.

கோவில் யானையான ஆண்டாள் லீவுக்கு முதுமலை போய் ரெஸ்ட் எடுத்து வந்து தெம்பாகத் தலையாட்டிக் கொண்டிருக்கிறது. பெருமாள் உற்சவருக்கு பளபளப்பாக வைர முடி சார்த்தியிருந்தார்கள். அய்யப்பா கூட்டமும் எப்போதும் க்யூவில் நிற்கிறார்கள். திருமடப்பள்ளியில் செல்வரப்பமும், தேன்குழலும் இன்னமும் கிடைக்கிறது.

இவைகள் அனைத்தின் இடையிலும் என்னுடைய பழைய ஸ்ரீரங்கத்தைத்தேடினேன்.

கிடைக்கவில்லை. காவிரியில் தண்ணீர் நெளிவதைப் பார்த்ததும் சற்று ஆறுதல். அரங்கனின் தீவும், ஒரு மிகப் பெரிய டூரிஸ்ட் தலமாக மாறிப் போய் அம்மா மண்டபம் வரை நிற்கும் பேருந்துகளின் ஜன்னல்களில் ஈரத்துண்டுகள் காய்கின்றன. கோவிலை நெருங்குவதற்கே ஒன்றரை மைல் சுற்ற வேண்டியிருக்கிறது.

ரங்கவிலாசத்தில் நகர இடமில்லாமல் கடைகள் இரண்டு பக்கமும் அடைத்துக் கொண்டுள்ளன. என் மனைவி வெண்கல விக்கிரகம் ஒன்று வாங்கினாள். கடைக்காரர் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சொன்னார். ”ஸார் யாரு தெரியுமில்ல, புஸ்தகத்தில் எழுதிடுவார்” என்று கூட வந்தவர் சொன்னதும், இருபத்தைந்து பைசா குறைத்துக் கொண்டார்.

தேவஸ்தானத்து அதிகாரியுடன் சென்றதால் அரங்கனின் தரிசனம் விசேஷமாகக் கிடைத்தது. குத்துவிளக்கு வெளிச்சத்தில் கற்பூரத்தின் ஒளிப்பிழம்பு. உற்சவர் முன் சற்று நேரம் நின்றபோது மட்டும் என்னால் ஆறாம் நூற்றாண்டுக்குப் போக முடிந்தது.

3 “இன்றைய ஸ்ரீரங்கம் திருச்சி கார்ப்பரேஷனின் ஓரங்கம். ஏ.டி.எம்.களும் தாறுமாறான கேபிள்களும் அம்மா மண்டபத்திலிருந்து தொடர்ந்து நிற்கும் ஆம்னி பஸ்களும் பெண்கள் கல்லூரியும் புதிய பள்ளிகளும் என்ன என்னவோ நகர்களும் மேம்பாலங்களும் என்னுடைய ஸ்ரீரங்கமல்ல.”

திருவரங்கம் அரங்கநாதர் கோவில் திருப்பணியில் ஒரு சிக்கல் எழுந்தது. ’திரு உறை மார்பன்’ என்று சிலப்பதிகாரத்தில் சொன்னபடி பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதருக்கு மார்பில் ஒரு இலக்குமி வடிவம் உண்டு.

திருப்பணி செய்யும்போது அதற்கு பதில் தந்திர சாஸ்திரத்துக்கு ஏற்ப ஒரு முக்கோணம் வைத்தார்கள். அதை சில பெரியவர்கள் ஆட்சேபித்தார்கள். என்னை அணுகினார்கள்.

நான் அமைச்சர் தமிழ்க்குடிமகன் அவர்களுடன் பேசினேன். அவர் உடனே இதைக் கவனித்து அதிகாரிகளுடன் பேசினார். இலக்குமி மறுபடி அரங்கனின் மார்பில் பெண்கள் தினத்தன்று வாசம் செய்யத் துவங்கியிருக்கிறாள்.

இதில் ஒரு சின்ன வியப்பான சமாசாரம், திருவரங்கத்தில் ஓர் ஆஸ்திரேலியர் தன் பெயரை கேசவன் என்று மாற்றிக் கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு, தினம் பெருமாளுக்கு பெரியாழ்வார் மாதிரி கைங்கரியம் செய்து கொண்டு அண்மைக் காலமாக வாழ்கிறாராம். அவரிடம் தீ விபத்துக்கு முன் எடுத்த பழைய ஃபோட்டோக்களைக் காட்டியபோது, அவர் அவைகளை ஸ்கான் பண்ணி, பஜ் என்று இருந்த அந்த மார்புப் பகுதியை தன் லாப் டாப்பில் ஸ்கேன் பண்ணி, டிஜிட்டலாக அதை பெரிது படுத்தி பிழை நீக்கிப் பார்த்ததில் இலக்குமி தெரிந்தாளாம்.

எனக்கு ஒரு ஹைக்கூ தோன்றியது.

அரங்கன் சந்நிதி
வெள்ளைக்கார குடுமி பக்தர் பையில்
துளசி மாலையுடன்
லாப்டாப்!
altalt
நெய்வேலி க. தியாகராசன், குடந்தை.
? ஸ்ரீரங்கம் மண்ணில் அடியெடுத்து வைக்கும்போது, இன்று தங்களுக்குத் தோன்றும் முதல் உணர்வு ?
! கோவிலுக்குப் போக வேண்டும் என்பது.

எஸ்.ராமசாமி, லால்குடி.
? ஸ்ரீரங்கத்தின் ஒரு பகுதிக்கு ‘அம்மா மண்டபம்‘ என்று பெயர் வரக் காரணம் என்ன ?

! அது நாயக்கர் காலத்து ராணியின் செல்லப் பெயர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எம். மகேந்திரா முருகன், எடுத்தனூர். ? வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கம் சென்றீர்களா ?
! சின்ன வயசில் சென்றிருக்கிறேன்.

மஞ்சுளா கோபாலன்.
? ரங்கநாதர் கோயிலைத் தவிர ஸ்ரீரங்கத்தில் உங்களுக்குப் பிடித்த இடம் எது ?

! கீழச் சித்திரை வீதி.

கண்ணன்.
? இன்றைய ஸ்ரீரங்கம் பற்றி உங்கள் கருத்து என்ன ?

! என்னுடைய ஸ்ரீரங்கம், கோவிலில் மட்டும்தான் பாக்கியிருக்கிறது. அதிலும் சில இடங்கள்தான்.

காந்தி.
? ஸ்ரீரங்கத்தில் முஸ்லீம்களின் சப்பாத்தி அமுதுடன் கூடிய நம்பெருமாள் தரிசனம் மகிழ்ச்சி அளித்ததா ? தாத்பர்யம் என்ன ?

! தாத்பர்யம் கோயிலுக்கு ஒரு சிக்கலான கட்டத்தில் மத நல்லிணக்கம் தேவைப்பட்டதே.
சுமன்.
? இப்போதுள்ள ஸ்ரீரங்கத்தில் வாழ விரும்புவீர்களா ?

! சித்திரை வீதியில் என்னால் வாழ முடியும்.
பெ. பாண்டியன், திருமயம்.
? அந்தக் காலத்து ஸ்ரீரங்கத்து தேவதைகளை இப்போது பார்த்தால் அடையாளம் கண்டு புன்னகைப்பதுண்டா ?

! இப்போது அவர்களுக்கெல்லாம் வயசாகி விட்டது. புன்னகையில் கொஞ்சம் சோகம் கலந்திருக்கிறது.
லலிதா செல்லப்பா, சென்னை – 75.
? திருப்பதி பெருமாளுக்கு இல்லாத என்ன சிறப்பு இருக்கு ஸ்ரீரங்கத்து பெருமாளுக்கு ?

! சயனம்
ஜி.மகேந்திர குமார், பாலக்காடு.
? நீங்கள் பார்த்து, அதிசயித்து, புரிந்து கொள்ள முடியாத விஷயம் உலகில் ஏதாவது உள்ளதா ?

! ‘நீலக்கடலரை மாமணி நிகழக்
கிடந்தது

போல் அரவணை
வேலைத் தலைக் கிடந்த மழை முகில்’

என்று ஆழ்வார் பாடிய அரங்கன் எனது மிகப் பெரிய அதிசயம்

விஷ்ணு கோயில்களில் ஆழ்வார் பாசுரங்களை விண்ணப்பித்தவர்களை அரையர் என்று சொல்வார்கள். ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் பகல் பத்து ராப்பத்து உற்சவங்களின் அரையர் சேவை நடைபெறும். அதற்கான பட்டுக் குல்லாயும் குழித்தாளக் கிண்கிணியின் ஒற்றைத் தாளமும் மைக் இல்லாததால் லேசாகக் கேட்கும் பிரபந்தப் பாடல்களும் என் சிறு வயது ஞாபகங்கள்.

இந்த

அரையர் சேவை தமிழ்நாட்டில் பல இடங்களில் நடைபெற்றதாம். இப்போது ஸ்ரீரங்கத்திலும், ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் மட்டும் இருக்கிறது. ஆழ்வார் திருநகரியிலும், வானமாமலையிலும் சில சமயம் நடைபெறுவதாக ஜீயர் ஸ்வாமிகள் சொன்னார்.

திருவரங்கராகிய இறைவனை இசையால் ஏத்தி மகிழ்விப்பது அரையர்களின் பணியாகும். நாதமுனிகள் காலத்திலிருந்து இது வரையறுக்கப்பட்டது. ராமானுஜர் ஆழ்வார் பாசுரங்களின் தத்துவங்களையும், பொருள்களையும் எல்லோரும் அறியுமாறு நடித்துக் காட்ட ராமனுஜடியார் என்று சிலரை நியமித்தார். ‘கோயில் ஒழுகு’ போன்ற நூல்களில் அரையர்களுக்கான நியமனங்களும் சலுகைகளும் கடமைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. ஸ்ரீரங்கத்தில் இன்றும் அரையர் குடும்பங்கள் உள்ளன. இன்றைய வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கிடையில் பழைய கிரமங்களை வழுவாமல் செய்கிறார்கள்.

என் நினைவில் அரையர் சேவையில் பட்டுக்குல்லாயும் ‘எச்சரிகே’, ‘நாயிந்தே நாயிந்தே’ (என் நாயகனே) போன்ற கோஷங்களும் சின்னதாக ஆர்ப்பரிக்கும் கிண்கிணியும் சன்னமான தென்றல் போலக் கேட்கும் ஆழ்வார் பாடல்களும் ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’, ‘உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமானென்றென்றே கண்கள் நீர்மல்கி’ போன்ற பாடல்கள் எல்லாம் கேட்டு வந்தபோது, அவற்றின் ஆழ்ந்த இலக்கிய அனுபவத்தையும், பக்திச் சுவையையும் ரசிக்கும் பக்குவம் எனக்கு அப்போது இல்லை. திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம், திருவாய் மொழியில் ‘கங்குலும் பகலும்’ பாசுரங்கள்… ‘சூழ் விசும்பு அணிமுகில்’ என்று சொர்க்கத்துக்குப் போகும் மார்க்கத்தை வைகுண்ட எகாதசியின்போது பெருமாளே வழிகாட்டும் பாடல்கள்… இவையெல்லாம் என் எழுத்துக்கு ஒரு முக்கியமான அஸ்திவாரமென்பது இப்போது தெரிகிறது.

ஆழ்வார் பாடல்கள் ஸ்ரீரங்கத்தில் எல்லா தினங்களிலும் ஒலிக்கும். என் மூதாதையரான குவளக்குடி சிங்கமையங்கார் பாடசாலையில் காலையில் ஒலிக்கும். பெருமாள் உற்சவங்களில் வீதிவலம் வரும்போது முன்னால் பிரபந்த கோஷ்டி தமிழில் வர, சம்ஸ்கிருத – வேத கோஷ்டி பின்னால் தான் வரும். இவையெல்லாம் என் காதில் விழுந்ததே ஒரு பாக்கியம் என்றாலும் என் தந்தை, தமையனார்களின் உந்துதலால் பிரபந்தம் முழுவதையும் படித்தது எழுத்தாளனான எனக்கு ஒரு பெரிய பக்க பலமாயிற்று. இப்போது அரையர் சேவைக்கு ஒரு மவுசு வந்து, அது கலிஃபோர்னியாவில் தலை கலைந்த கதர் அணிந்த அறிவுஜீவிகள் மத்தியில், ‘The total experience of the ‘Tirunetuntantakam’ as an expression of divine ethos‘ என்று இங்கிலீஷ் பேசிக் கொண்டு டிஸ்கஸிக்கப்பட்டால் ஆச்சரியமில்லை.

alt
Srirangam Rajagopuram sketch by Sujatha Desikan (1993)
ஜீயர் சுவாமிகளின் விடாமுயற்சியால் இன்று இந்தியாவிலேயே மிக உயரமாக எழுந்திருக்கும் ராயகோபுரத்தைச் சுற்றிலும் என்னுடைய இளமை நினைவுகள் அநேகம் உள்ளன. அப்போதெல்லாம் அதற்கு மொட்டைக் கோபுரம் என்று பெயர். விஜயநகர ராயர்களின் ஆட்சிக்காலத்தின் விளிம்பில் கட்டப்பட்டதாலோ என்னவோ, ராஜா இனிமேல் காசில்லை, தீர்ந்து போய் விட்டது என்று சொன்னதால், முற்றுப் பெறாமல் விட்டுப் போன கோபுரத்தை முடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சின்ன வயசில் வீதிப் பயல்களிடம் கதை அளந்திருக்கிறேன். மேகத்தைத் துளைத்துக் கொண்டு ஒரு எவ்வு எவ்வினால் சந்திரன் மேல் அடியெடுத்து வைக்கலாம் என்று நான் சொன்னதை அப்போதே பலர் நம்பவில்லை. மொட்டைக் கோபுரத்தை பஸ் ஸ்டாண்டிலிருந்து அணுகும்போது வலப் பக்கத்தில் இருந்த மூலைக் கடையில்தான் என் முதன் முதல் சிகரெட் முயற்சி.

ராத்திரி வேலையாகப் பார்த்துச் சிம்னி விளக்கு வெளிச்சம் உள்ள கடையாகத் தேர்ந்தெடுத்து, முகத்துக்குக் குறுக்காகக் கைத்துண்டு போட்டு மூடிக்கொண்டு, இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நோக்கி வாயின் இடது ஓரமாக, ‘ஒரு சிகரெட்’ என்றேன்.

“என்ன சிகரெட்டு ? எத்தனையோ சிகரெட்டு இருக்குது ?”

“எ…எ…எ… ஏதாவது !”

“கோதை அம்மா பேரன் தானே நீ ? எதுக்காக மூஞ்சில சவுக்கம் போட்டிருக்கே ?”

பைசா கொடுத்ததையும் பாராமல் ஓடி வந்து விட்டேன்.

Srirangam Rajagopuram sketch by Sujatha Desikan (1993)

ராயகோபுரத்தின் முழு அழகையும் மறைக்கும் வகையில் ஒரு முன் மண்டபம் இருக்கும். ஒரு மாதிரி அசௌகரிய முக்கோணமாக, கூர்ச்சையாக முடியும் அந்த இடத்தில், என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் குரோட்டன்ஸ் வளர்த்து, நடுவே காந்தி சிலை வைத்தார்கள். இந்தியாவிலேயே சிரிக்கும் காந்தி சிலை அந்த ஓர் இடத்தில் தான் உள்ளது.
alt

சிலைக்கு முன் பக்கத்தில் மண்டபத்தை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் தட்டி போட்டுத் தடுத்து, கோலா, சோடா, பத்திரிகை போன்றவற்றை விற்பார்கள். அவற்றில் ‘சிடரெட்‘ என்ற பானத்தில் கொஞ்சம் அதிகப்படியாக ஆல்கஹால் இருக்கிறது என்று யாரோ புரளி கிளப்பிவிட, வைத்தி நெற்றியில் கைக்குட்டை கட்டிக்கொண்டு, பாட்டில் பாட்டிலாக ‘சிடரெட்‘ பானம் அருந்துவான். அப்போதெல்லாம் மதுவிலக்கு அமுலிலிருந்ததால் ‘கிக்’ வேண்டுமென்றால் தெற்கு வாசல் மெடிக்கல் ஷாப்பில் ஜிஞ்சர் பரிசை நாட வேண்டும். அதைச் சாப்பிட அசாத்தியத் திறமையும் கான்க்ரீட் வேய்ந்த வயிறும் வேண்டும்.

ராயகோபுரத்தை, வெள்ளைக்காரன் வரைந்த ‘டாக ரோடைப்‘ என்ற சென்ற நூற்றாண்டுச் சித்திரத்தில் மேற்சொன்ன மண்டபம் இல்லை. முகப்பில் வைக்கோல் போரும் மாட்டு வண்டியுமாகப் பின்னணியில் ராய கோபுரம் தெரியும் இந்தச் சித்திரம் ஏ. கே. செட்டியாரின் ‘தமிழ் நாடு பயணக் கட்டுரைகள்‘ என்ற புத்தகத்தில் இருக்கிறது. அந்தப் புத்தகத்தை என்னிடமிருந்து இரவல் வாங்கிச் சென்று இதுவரை திருப்பித் தராத நண்பரே ! ஐயா! தயவு செய்து திருப்பி விடும்! …

ராயகோபுரத்தை ஒட்டிய உள்பக்கத்திலிருந்து தெற்கு வாசல் என்னும் பிரதான கடைத் தெரு துவங்கிக் கோயில் வாசல் வரை செல்லும். கோபுரத்தோடு ஒட்டிய பகுதியில், எதிர் எதிராக இரண்டு ஓட்டல்கள், எப்போதும் போட்டியாக ஒன்றை ஒன்று லௌட்ஸ்பீக்கர் சங்கீதத்தால் திட்டிக்கொண்டிருக்கும். இரண்டில் ஓர் ஓட்டல் மட்டும் எப்போதும் மூடியைத் திறந்தால் ரோஸ் மில்க், மாடியைத் திறந்தால் லாட்ஜிங் என்று கொழிக்க, மற்றது எப்போதுமே அழுது வடியும். இது ஏன் என்று எனக்குப் புரிந்ததே இல்லை. இரண்டு ஓட்டல்களிலும் விசேஷம், உள்ளே போய் டிபன் சாப்பிடும்போது, பச்சை பெயிண்ட் அடித்த சுவரை உற்றுப் பார்த்தால் கிருஷ்ண தேவராயர் காலத்துச் சிற்பங்கள் தெரியும். ‘இன்றைய ஸ்பெஷல்‘ போர்டு மாட்டிய சரித்திரம்.

ராயகோபுரத்தைக் கடக்கும்போது ஆர்க்கியலாஜிக்காரர்களின் நீல போர்டு ஒன்று இருந்ததாக ஞாபகம். அதோடு டவாலிச் சேவகர் ஒருவரும் நின்று கொண்டிருப்பார். அவரை ஒரு முறை ‘உங்களுக்கு என்ன வேலை?‘ என்று கேட்டதில், அவர் ‘போடாங்க…‘ என்று கெட்ட வார்த்தை பிரயோகித்தார். எதிர் எதிரே, கோபுர வாசலின் உள் பகுதியில் இருந்த படிகளில், அப்போது யாரும் ஏறிச் சென்றதாக நினைவில்லை. படிகள் இருந்தனவா என்ன ? கண்டா முண்டாச் சாமான்கள் நிறைய இருந்தன. கொஞ்சம் நோண்டிப் பார்த்தால் கிருஷ்ண தேவராயர் காலத்துச் செருப்பு ஏதாவது அகப்படலாம்.
alt

கோபுரத்திலிருந்து தெற்கு வாசலில் நடந்து செல்கையில் வெற்றுக்கு ஒரு நாலு கால் மண்டபம் இருக்கும். இதைக் கடந்தவுடன் வலது பக்கம் சாத்தார வீதி. இடது பக்கம் தெற்கு அடையவளைஞ்சான். ஸ்ரீரங்கத்தில் அத்தனை வருஷங்கள் இருந்திருக்கிறேன். தெற்கு அடையவளைஞ்சான் தெருவுக்கு ஒரே ஒரு முறை தான் போயிருக்கிறேன். சித்திரை வீதிக்காரர்கள் மற்ற வீதிகளுக்கு லேசில் போக மாட்டோம். சாத்தார வீதி அப்படியில்லை. அது கொஞ்சம் கலகலப்பாக இருக்கும். பூ விற்பார்கள். ஸ்ரீ ஜெயந்திக்குச் சப்பரம் கட்டுவதற்கு இங்கு தான் வருவோம். சுவாமிக்குப் பூப் பல்லக்கு இங்குதான் செய்வார்கள். பெட்ராமாக்ஸ், வாழை மரம், சித்திரத்தை போன்ற நாட்டு மருந்துகள் எல்லாம் இங்கேதான் கிடைக்கும். சாத்தார வீதி மூலையில் தான் கலைஞர் கருணாநிதி, தந்தை பெரியார் போன்றவர்கள் எல்லாம் பேசுவார்கள். லவுட்ஸ்பீக்கர் வைத்து சப்தத்தை தெற்கு வாசல் வரை கொண்டு விடுவார்கள்! மூலையில் நின்று கொண்டு கேட்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருப்போம். பெரியார் ஸ்ரீ ரங்கநாதரிடம் ரொம்ப எக்கச்சக்கமான கேள்விகள் எல்லாம் கேட்பார். ‘உறையூருக்கு எதற்குப் போறே நீ ? வாலியை ஏண்டா மறைஞ்சு கொன்னே நீ ?‘ என்றெல்லாம்! பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பார்ப்பானை முதலில் அடி’ என்பார். அந்தக் கூட்டங்களில் கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு தலைமை தாங்கிய கருப்பண்ணக் கோனார் தான் எங்கள் தெருவில் பால் டிப்போ வைத்திருந்தார். எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப சிநேகிதர். பார்ப்பனரை வெறுக்கிறதையும் பால் வியாபாரத்தையும் அவர் கலக்கவே மாட்டார்.

சாத்தாரத் தெரு முனையிலிருந்து சற்று முன்னே போனால், கடைத் தெருவில் ஜவ்வாது, புனுகு, சந்தனம் எல்லாம் விற்பார்கள். கடைக்காரனின் சீட்டுக்கு அடியில் ஒரு கூண்டு வைத்து புனுகுப் பூனை சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருக்கும். நான் பார்த்த முதல் ‘ரோபாட்‘ இந்தக் கடையில் கையில் வாசனாதி திரவியங்களை வைத்துக் கொண்டு தலையைச் சதா லேசாக ஆட்டிக் கொண்டிருந்த நாமம் போட்ட, விளம்பரச் செட்டியார் பொம்மை.

அந்தக் கடைக்கு அருகில், எதிரில் மண்டபத்து தூணருகில் தரை மட்டத்துக்கு இரண்டடி கீழே முகம் முழுவதும் வெண்ணை அணிந்து கொண்டு அடுத்த கிருஷ்ண ஜெயந்திக்குக் காத்திருக்கும் பாதாள கிருஷ்ணன் சந்நிதியின் முன் நடக்கும் உறியடி உற்சவம், எங்கள் கீழ் வாசல் உறியடியைப் போல அத்தனை விஸ்தாரமாக இருக்காது. முதுகு பூரா நாமம் போட்டுக் கொண்டு ஓர் ஆள் வந்து அலங்கார ஜடை மூலமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் குட்டிக் குட்டித் தயிர்ச் சட்டிகள் வைத்த ஃபிரேமை, ஒரே வீசு வீசி, உடைப்பதைப் பெருமாள் பார்த்திருந்து விட்டு அவசரமாகப் புறப்பட்டுப் போய் விடுவார்

Advertisements

Comments»

1. SudhanthiranSanthanakrishnan - February 18, 2014

Sujadhavin SriRangaththaiPatri Avarsonnadhai Padikkumpozhdhu Namum Andha kala Srirangaththn Thanmaiyai unaramudiginradhu Namum anha kalSrirangaththil vazhndhu irukka koodadha enru ennaththonrugiradhu.Migavum Rasiththen. Nanri


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: